சென்னை: குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே..எஸ்அழகிரி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைவதாக செய்திகள் வெளியானது. கட்சியின் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று புலம்பி வந்த குஷ்பு, சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களையே பரபப்பி வந்தார். கடந்த இரு நாட்களுக்கு தனது டிவிட்டர் பதிவில், ‘பார்வைகள், புரிதல்கள், விருப்பு, வெறுப்புகள் காலத்திற்கேற்ப மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது’ என பதிவிட்டதுடன், காவி கலரிலான உடை அணிந்திருந்த புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இதனால், அவர் பாஜகவில் இணையப்போவது உறுதியாது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், நேற்று கணவர் சுந்தர்சி உடன் டெல்லி பறந்த குஷ்பு இன்று மதியம் பாஜகவில் இணையவுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக, அவரை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்தது. அதைத் தொடர்ந்து தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். அதில், “கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர். மக்களால் அங்கீகரிக்கப் படாத தலைவர்கள் சிலர், என்னைப் போன்றவர்களை அடக்கி, ஒடுக்குகிறார்கள். அதனால் மிகவும் ஆழ்ந்து யோசித்து, காங்கிரஸ் உடனான எனது இணைப்பை முடித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இதனை எனது பணி விடுப்பு கடிதமாக ஏற்றுக் கொள்ளவும்” என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குஷ்புவின் நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ்கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்று தெரிவித்தவர், குஷ்பு கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும்,
குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார் என்றும் கூறினார்.