டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2023-–24-ம் கல்வி ஆண்டில் 37 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றிருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருப்பதாகவும் பாராட்டி உள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்கள் இடை நிற்றல் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி குறித்த தரவுகளை சேகரிக்க ‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ்’ என்ற தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் பராமரித்து வருகிறது. இந்த தளம் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
2022-–23-ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 25.17 கோடியாக இருந்தது. இது 2023–-24-ல் 24.80 கோடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் 37 லட்சம் மாணவ-மாணவிகள் இடை நிற்றல் ஆகி உள்ளனர். இதில் மாணவர்கள் 21 லட்சமாகவும், மாணவிகள் 16 லட்சமாகவும் உள்ளனர்.
மேலும் மாநிலங்களில் பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களையும் கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், ஒடிசா, ஆந்திரா, இமாசல பிரதேசம், காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தானில் மாணவர் சேர்க்கை சதவீதத்தை விட பள்ளிகளின் சதவீதம் அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், மராட்டியம், மேற்கு வங்காளம், அரியானா, குஜராத், டெல்லி மற்றும் பீகாரில் பள்ளிகளின் விகிதத்தை விட மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.
இது உள்கட்டமைப்பை சிறப்பாக பயன்படுத்துவதை காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பது மற்றும் 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து மட்டங்களிலும் கல்விக்கான உலகளாவிய அணுகளை உறுதி செய்வதும் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முதன்மையான நோக்கமாகும். மாணவர் சேர்க்கை மற்றும் தக்கவைத்தல் போன்ற பகுதிகள், 1-ம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களில் எத்தனை பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் தக்கவைக்கப்படு கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது கல்விக்கொள்கையின் செயல்திறனைக் குறிக்கிறது.
‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ்’ தளத்தில் பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட மாணவர் வாரியான தரவுகளைக் கொண்டு, மாணவர்களின் இடைநிற்றலை இப்போது துல்லியமாக அடையாளம் காண முடியும். அத்துடன் அவர்களை கண்காணித்து மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரவும் முடியும். மேலும் மாணவர்களின் முழு பள்ளி காலகட்டத்தின் முன்னேற்றத்தையும் கண்காணிக்க உதவும். தனிப்பட்ட மாணவர் வாரியான தரவுகள் உண்மையான காட்சியை இன்னும் துல்லியமாக பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம் முதலிய திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை. பிகார், அசாம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பள்ளிப்படிப்பை இடையில் விடும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் கல்வி அமைச்சக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப் பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019 – ல் 99 பேர் என்பது 2024 – ல் 100 பேர் என உயர்ந்துள்ளது. Advertisement அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை, 97.5 – ல் இருந்து 100 ஆக 2024 – ல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019 – ல் 81.3 என இருந்தது 2024 – ல் 89.2 ஆக உயர்ந்துள்ளது.
மாணவிகளைப் பொறுத்தவரை 2019 – ல் 89.4 சதவிகிதமாக இருந்தது 2024 – ல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிகாரில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை 51.2 சதவிகிதம் என்பது, 38.8 சதவிகிதம் என 12.4 சதவிகிதம் குறைந்து இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது” குறிப்பிட்டுள்ளது.