சென்னை: சென்னையில் நடைபெற்ற  அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய் நடிகர் விஜய்,  2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறியதுடன், அங்கே மணிப்பூர், இங்கே வேட்கை வயல் என்றும், திமுகவின் பரம்பரை ஆட்சி குறித்தும், திருமா மனம் நம்முடன் தான் இருக்கிறார் என்று பேசி தமிழ்நாடு அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளார்.

ஃபெஞ்ஜல் புயல் பாதிப்பு, சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இன்றி திறப்பு போன்ற  நடவடிக்கைகளால் ஆட்சியாளர்களின் மீதான அதிருப்தி மக்களிடையே வெளிப்பட்டு உள்ளது. அதன் எதிரொலியாக அமைச்சர்களின்பேனர்கள்  பொதுமக்களால் கிழிக்கப்பட்டதுடன், அமைச்சர் மீதுமக்கள் சேருவாரி இறைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் விஜயின் திமுக எதிர்ப்பு அரசியல் பேச்சு, தமிழக அரசியல் களத்தை மேலும் அனல் பறக்க செய்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க தலைவர் விஜய் இந்த புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருஉள்படபலர்  கொண்டனர்.

நிகழ்ச்சியில்  பேசிய விஜய், “பிறப்பால் நாம் அனைவரும் சமம். நீ எந்த சாதியில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயிரியல் கோட்பாட்டை உறுதி செய்யும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை வழங்கியவர் அம்பேத்கர்.

இந்த நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்வதை நான் மிகப்பெரிய வரமாக கருதுகிறேன். இன்றும் பல பேருக்கு பிடித்தமான இடமாக இருப்பது நியூயார்க். ஆனால், 100 வருடத்திற்கு முன்பே நியூயார்க் சென்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்று சாதித்த ஒரு அசாத்தியமானவராக இருந்தார், அவர் தான் அண்ணல் அம்பேத்கர்.

இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்தால் இன்றைய இந்தியாவைப் பார்த்து பெருமைப்படுவாரா, வருத்தப்படுவாரா… இன்று நம் நாடு முழு வளர்ச்சியே அடைய வேண்டும் என்றால் அதற்கு நம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம், அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான நியாயமான தேர்தல். அது அமைய ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வலிமையான கோரிக்கை.

ஏப்ரல் 14 இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும். அதை, இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்.

அதேசமயம், இன்றைக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கிருக்கின்ற அரசு மட்டும் எப்படி இருக்கிறது. வேங்கைவயல் பிரச்னைக்கு சமூக நீதி பேசுகிற, இங்கே இருக்கின்ற அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்குத் தெரியவில்லை.

இதையெல்லாம் அம்பேத்கர் இன்று பார்த்தால் வெட்கப்பட்டுத் தலைகுனிவார். பெண்களுக்கு, மனித உயிர்களுக்கு எதிரான எத்தனையோ பிரச்சனைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வு மக்களை உண்மையாகவே நேசிக்கின்ற ஒரு நல்ல அரசு.

“சமூக நீதி பேசுகிற, இங்கே இருக்கின்ற அரசு வேங்கைவயல் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்குத் தெரியவில்லை”.

உங்களுடைய சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026 ம் ஆண்டில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவனால் வர இயலவில்லை. அவர் வர முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க மமுடிகிறது. ஆனால், அவருடைய மனம் இப்போது நம்மிடம் தான் இருக்கும்” என்றார்.

இவ்வாறு பேசினார்.

நடிகர் விஜயின் பேச்சு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசையும்,  மாநில திமுக அரசையும் அவர் கடுமையாகவும், நேரடியாகவும் விமர்சித்து இருப்பது, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.