ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, சிலர் குழப்பம் விளைக்க முயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை பார்து, முதல்வர், ‘உங்களைப் போன்ற பல நாய்கள் உள்ளன’ என கடுமையாக பேசினார். முதல்வரின் சூடான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
குளிர்ச்சியின் அடையாளமாக, எப்போதும் வெள்ளை உடைகளை அணிந்து வரும் முதல்வர், ஆர்ப்பாட்டக்காரர்களை நாய்கள் என சூடாக விமர்சித்து பேசியது விவாதப்பொருளாக மாறி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நாகார்ஜுனா சாகரில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து, அங்கு முதல்வர் சந்திரசேகர ராவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, சிலர், ஆவணங்களை காட்டி, குழப்பத்தை உருவாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை கண்ட சந்திரசேகரராவ் பொறுமையை இழந்து, குழப்பவாதிகளை நாய்கள் என்று கடுமையாக சாடினார்.
மேலும், அதிகாரிகளிடம், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்த காகிதங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று காவல்துறையினரிடம் கூறியதுடன், ஆர்ப்பாட்டக்கார்களை நோக்கி, நீங்கள் இங்க இருக்க விரும்பினால், தயவுசெய்து அமைதியாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள். உங்கள் செயல்களுக்காக யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். உங்களைப் போன்ற பல நாய்கள் உள்ளன என்று விமர்சித்துடன், நாங்கள் உறுதியாக இருந்தால், உங்களைப் பற்றிய எந்த தடயமும் இருக்காது. நீங்கள் தூசியாகிவிடுவீர்கள் “என்றவர், அவர்களை உடனே அங்கிருந்து அகற்றும்படியும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய முதுல்வர், “தலித் அதிகாரமளித்தல் நிதியத்தின்” கீழ் தலித்துகளின் நலனுக்காக வரவிருக்கும் பட்ஜெட்டில் ரூ .1,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அதை, தான் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாகவும் அவர் கூறினார். எந்தவொரு கட்சிக்கும் தனது அறிவிப்பு மற்றும் ஆட்சி மீது மாற்று கருத்து இருந்தால், அவர்களும் கூட்டங்களை கூட்டி, அவர்கள் விரும்பியதை மக்களுக்கு தெரிவிக்க முடியும் என்று கூறியதுடன், புத்தியில்லாத செயல்களை நாட வேண்டாம். மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு வந்து அவர்களை தொந்தரவு செய்வது நல்ல கலாச்சாரம் அல்ல. யாரும் அதைப் பாராட்ட மாட்டார்கள், வரும் நாட்களில் மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள். அவர்களின் தலைவரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன். எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. நீங்கள் வரம்புகளை மீறினால், என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும், “என்று அவர் கூறினார்.
முதல்வரின் காட்டமான பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போராட்டக்காரர்கள் குறித்து முதல்வரின் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தெலுங்கானா பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மேலும், “நாகார்ஜுனா சாகர் பொதுக் கூட்டத்தில் பெண்களை நாய்கள் என்று முதல்வர் அழைக்கிறார். அங்கே நிற்கும் பெண்கள் அனைவரையும் நீங்கள் மறந்துவிடாதீர்கள், அவர்கள்தான் நீங்கள் இந்த நிலையில் அமர காரணம். உங்கள் அணுகுமுறை குறித்து சிந்தியுங்கள், வார்த்தைகளை மாற்றுங்கள் என்று ஒரு டிவீட்டில் கூறினார்.
ஐதராபாத்தில் இருந்து 135 கி.மீ தூரத்தில் உள்ள ஹாலியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராவ், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் முடிக்கப்படாவிட்டால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் (2023 இல்) போட்டியிட மாட்டேன் என்று கூறினார். தற்போதைய டிஆர்எஸ் உறுப்பினர் நோமுலா நரசிம்மயா கடந்த டிசம்பரில் இறந்ததால் , அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்தான் முதல்வர் ஆர்ப்பாட்டக்காரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.