சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டபேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மாநில முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் இறுதியில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. மேலும் புயல் கரையை கடந்த நவம்பர் 30ந்தேதி மற்றும் டிசம்பர் 1ந்தேதி அன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால், பிரசவரத்துக்கு தயாராக இருக்கும் கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைகளில் முன்கூட்டியே சேர்ந்திடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை எ தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களில் புயலின்போது 1,526 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. 1,526 குழந்தைகள் பிறந்த நிலையில் மகப்பேறின்போது தாயோ, சேயோ யாரும் உயிரிழக்கவில்லை. கர்ப்பிணிகள் முன்கூட்டியே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டதால் எந்தவொரு பாதிப்பும் நிகழவில்லை என தெரிவித்தார்.