புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ என்பதில் திரட்டப்பட்ட நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்(ஆர்டிஐ) பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு பதிலளித்து வருகையில், மோடி அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் வேறொரு விளக்கமும் தரப்படுகிறது.
மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சக அறிவிப்பின்படி, ‘பிஎம் கேர்ஸ்’ என்பது மத்திய அரசால் அமைக்கப்பட்டதாகும். மேலும், அந்த அமைச்சகம் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு தரும் நன்கொடைகள் சிஎஸ்ஆர் பங்களிப்பு கணக்கிலேயே சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இல்லையென்றால், அந்த நிதியம் தொடங்கப்பட்ட குறைந்த காலத்திலேயே, ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி, பெருநிறுவனங்களால் குவிக்கப்பட்டதை சிஎஸ்ஆர் கணக்கில் கொண்டுவந்திருக்க முடியாது.
மேலும், ஆர்டிஐ சட்டப்படி, அரசால் ஏற்படுத்தப்படும் எந்த அமைப்பும், ஒரு பொதுத்துறை அமைப்பாகும். ஆனால், அப்படி ஏற்படுத்தப்பட்ட ‘பிஎம் கேர்ஸ்’ நிதி தொடர்பாக ஆர்டிஐ சட்ட அடிப்படையில், பொதுமக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று மத்திய அரசால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது மற்றும் ‘பிஎம் கேர்ஸ்’ என்பது ஒரு பொதுத்துறை அமைப்பல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே, தற்போதைய சூழலில், மத்திய அரசின் இத்தகைய முரண்பட்ட அறிவிப்பும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்பும் முரண்பட்டதாக இருப்பதோடு, ஏகப்பட்ட கேள்விகளையும் எழுப்புகிறது.