சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருபவரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் பல்வேறு யூ டியூப் சேனல்களில் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபருமான சங்கர் தேனி-யில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

எனக்கும் வாய் இருக்கிறது என்று கூறுவது போல தமிழ்நாட்டில் பலர் பேசி வருவதும், அவர்கள் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், விமர்சிப்பவர்கள் எந்த தண்டனையும் கிடைக்காமல் தப்பிச் செல்வதும் வாடிக்கையாகி வரும் நிலையில் சவுக்கு சங்கரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

சவுக்கு சங்கரின் இந்த கருத்து காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதனையடுத்து தேனி-யில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது 293 (பி), 509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை கைது செய்த போது அவருடன் இருந்த இருவரை காவல்துறையினர் விசாரித்ததில் சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.