டில்லி:
கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்கப்பட்டது, ஜனநாயகத்துக்கு கிடைத்த தோல்வி என்றும், அவர்களின் (பாஜ) பேராசை வென்றது என்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு உள்ளார்.
குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக அரசியல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் அதிகார போதை காரணமாகவே, கர்நாடக மாநில அரசு கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கர்நாடகாவில் காங்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றது முதல், அவர்கள் கூட்டணியை அச்சுறுத்தலாகவும், அதிகாரத்திற்கான பாதையில் ஒரு தடையாகவும் பார்த்தார்கள். அவர்களின் பேராசை வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கும், நேர்மைக்கும், கர்நாடக மக்களுக்கும் ஏற்பட்ட தோல்வி என்று பதிவிட்டுள்ளார்.