வாரணாசி

வாரணாசியில் ஒரு ஜப்பானிய சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருடைய பொருட்களை சிலர் திருடி உள்ளனர்.

பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இடைஞ்சல்கள் அதிகரித்து வருகின்றன.   அக்டோபர் மாதம் ஒரு சுவிட்சர்லாந்து தம்பதியினர் ஃபதேபூர் சிக்ரியில் தாக்கப்பட்டனர்.   சில வாரங்களுக்கு  முன்பு சோன்பந்தரா மாவட்டத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பயணி பதில் வணக்கம் சொல்லாததற்காக அடித்து நொறுக்கப்பட்டார்.   நான்கு நாட்களுக்கு முன்பு பிரஞ்சு நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மிர்ஜாப்பூரில் தாக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் தற்போது வாரணாசியில் ஒரு ஜப்பானிய சுற்றுலாப்பயணி பாதிக்கப் பட்டுள்ளார்.     அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவர் கொண்டு வந்த அனைத்துப் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.   அவருடைய துணிமணிகள்,  காமிரா, மொபைல், பாஸ்போர்ட், விசா, ரொக்கப்பணம்,  கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஆகியவை அனைத்தும் திருடப் பட்டுள்ளன.   இது குறித்து வாரணாசி போலீசார் வழக்கு பதிந்து திருடனை தேடி வருகின்றனர்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர், “இது நமது இந்தியப் பிரதமர் மோடிக்கு பெரும் அவமானத்தை தேடித்தரும் செயலாகும்.   ஜப்பான் பிரதமருடன் நட்பு பாராட்டும் மோடி ஆட்சி செலுத்தும் நாட்டில் ஒரு ஜப்பானியருக்கே  பாதுகாப்பில்லாத நிலையில் இந்தியா உள்ளது” எனத் தெரிவித்தார்.