சேலம்:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் 214வது நினைவு தினம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலக வளாகத் தில் நடைபெற்றது.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, யாருக்கும் பொதுக்கூட்டம் நடத்தவோ, ஊர்வலம் செல்லவோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கோ அனுமதி இல்லை. விழாவுக்கு வருவோர் கைகளில் கொடி மற்றும் பேனர்கள் பிடித்து வர அனுமதி இல்லை. ;எந்த ஒரு அமைப்பினரும் தியாகி தீரன் சின்னமலை நினைவிடத்தில் புகைப்படமோ, இதர பொருள்களையோ எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை என்றும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் கலைந்து சென்று விட வேண்டும், சங்ககிரியில் உள்ள பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது. விழாவுக்கு வருவோர் தங்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி உபயோகிக்கக் கூடாது. வாகனத்தின் மேல்பகுதியில் அமர்ந்து வரக்கூடாது என்று பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3-ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.