லக்னோ,

த்தியப் பிரதேசத்தில் நர்மதை ஆற்றையும் சுற்றுச்சூழலையும் காக்கும் வகையில் 12மணி நேரத்தில் 6 கோடி மரக்கன்றுகளை நட்டுப் புதிய உலகச் சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை ம.பி. அரசு செய்திருந்தது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காற்று, நீர் ஆகியவை மாசுபடுவதைத் தடுத்துச் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக நேற்று பகல் 12 மணி நேரத்துக்குள் மட்டும் பல்வேறு நகரங்களில் 6 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சீகூர் மாவட்டத்தின் அமர்கந்தக் நகரில் நர்மதை ஆற்றங்கரையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் அவர் மனைவி சாதனா சிங்கும் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த மாபெரும் மர நடு விழா உலகச் சாதனையாகக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. எனினும் கின்னஸ் சாதனைக்காக இந்த விழாவை முன்னெடுக்கவில்லை என்றும் சுற்றுச்சூழலைக் காப்பதற்காகவே இந்த அரிய முயற்சியைத் தாம் மேற்கொண்டதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றைக் கொண்டாடும்போது அந்த நாளின் நினைவாகக் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் என சிவராஜ் சிங் சவுகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.