டெல்லி: மக்களவையில் இன்று வஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தி உள்ளனர். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட இண்டியாக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் சிறுபான்மையிராக உள்ள இஸ்லாமியர்களுக்கு என தனி சட்டமும், அவர்களின் சொத்து பாதுகாப்புக்காக வஃப் வாரிய சட்டமும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதைத்தொடர்ந்தே, நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்குமான ஒரே சட்டமாக பொதுசிவில்சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல வஃப் வாரிய சட்டத்திலும் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருக்கும் வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து திருத்த மசோதா தாக்கல் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜுஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மேலும், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’ சட்டத்தை ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995’ என்று பெயா் மாற்றம் செய்யவும் மசோதா பரிந்துரைத்துள்ளது.
இந்த மசோதாவின்படி , தற்போதைய சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவு 40 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரிய உறுப்பினா்களும் இடம்பெறும் தொகுப்பு அமைப்பாக மாற்றப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவா்களும் வக்ஃப் வாரியங்களில் இடம்பெறுவதை மசோதா உறுதி செய்துள்ளது.
மேலும், போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் (அக்ஃப்) உருவாக்கப்பட்டு, அதில் ஷியாஸ், சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘வக்ஃப்’ என்பதற்கான தெளிவான விளக்கம் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்ஃப் சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்தவொரு நபரும் ‘வக்ஃப்’ உறுப்பினராவாா்’ என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வலைதளம் மற்றும் தரவுத்தளம் மூலமாக வக்ஃப் வாரிய சொத்துகள் பதிவை முறைப்படுத்தி, வெளிப்படுத்தன்மையைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை, வக்ஃப் வாரிய அதிகாரங்களை திருத்தம் செய்யும் வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீர்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடர்பான வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த மசோதாவின் நகல் அவை உறுப்பினா்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மக்களவையில் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்ததோடு, மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், திமுக எம்.பி. கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.