மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக, இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய மூலப்பொருட்களின் பற்றாக்குறை, குறிப்பாக சிலிகான் எண்ணெய் (PDMS) கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அமோனியா விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமோனியா, லேட்டெக்ஸை நிலைப்படுத்தவும், அதிலுள்ள அதிகப்படியான புரதங்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிலிகான் எண்ணெய் கண்டோமுக்கு மென் பூச்சாக செயல்படுகிறது.

மேலும், பாலித்தீன் ஃபாயில், அலுமினியம் ஃபாயில், ரசாயனங்கள், மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை உயர்வு, கிடைப்பில் தாமதம், மற்றும் போக்குவரத்து தடைகள் ஆகியவை உற்பத்தி மற்றும் விநியோகத்தை பாதித்துள்ளதாக முன்னணி நிறுவனம் ஒன்றின் நிர்வாகி தெரிவித்ததாக மிண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமோனியா விலை 40–50% வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. சிலிகான் எண்ணெய் விலை “மிக அதிகமாக உயர்ந்துள்ளது” என்பதும் சந்தையில் அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த போர் தொடங்கி சுமார் 4 வாரங்கள் ஆகும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுமார் 1.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆணுறை சந்தைக்கு தேவையான அமோனியாவில் 86% வரை இறக்குமதியையே நம்பியுள்ளது.

இந்த அமோனியா பெரும்பாலும் சவுதி அரேபியா, கத்தார், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து வருகிறது.

இந்த சூழலில், மேற்கு ஆசியப் போரின் தாக்கம் தற்போது காண்டம் உற்பத்தியையும் பாதிக்க தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை அதிகமாக தாக்கும் என்றும், விலை உயர்வு காரணமாக ஆணுறை பயன்பாடு குறையலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக திட்டமிடாத கர்ப்பம், தாய் மற்றும் குழந்தை இறப்பு அதிகரிப்பு, மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் (STI) மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக எரிசக்தி தேவையுள்ள அமோனியா மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் விலை கிலோக்கு $0.48 இலிருந்து $0.68 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]