கனடா, மெக்ஸிகோ மீதான வரிவிதிப்பை இன்று முதல் அமல்படுத்தியது அமெரிக்கா, மேலும் சீனா மீதான வரியை இரட்டிப்பாகிஉள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை மூலம் பேரழிவுக்கான வர்த்தகப் போரை துவங்கியுள்ளார் என்று அந்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட உள்ளது, கனேடிய எரிசக்தி பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படுகின்றன.

கூடுதலாக, பிப்ரவரியில் சீன இறக்குமதிகள் மீது டிரம்ப் விதித்த 10% வரி இரட்டிப்பாகி 20% ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது நாடு 21 நாட்களில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை விதிக்கும் என்று கூறினார்.

தனது சொந்த செல்வாக்கை அதிகரிக்க அமெரிக்க அதிபர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அதிக பணவீக்கம் மற்றும் பேரழிவு தரும் வர்த்தகப் போரின் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சீனா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீதான வரி உயர்வை பிப்ரவரி மாதம் அறிவித்த டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோ மீதான நடவடிக்கையை 30 நாட்கள் நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த இவ்விரு நாடுகளுக்கும் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்திருந்தன.

இருந்தபோதும், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இன்று முதல் வரி விதிப்பை அமல்படுத்தியிருப்பது உலக வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.