டில்லி:
மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டது.இதில் 6-ம் வகுப்பு முதல் அனைத்து மாநிலங்களிலும், தாய்மொழி உடன், இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த முறை மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஏற்றதும், புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் என்று கூறியது. அதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது ஆய்வறிகையை புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தனர்.
இந்த வரைவு அறிக்கையில், தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பதுடன் மட்டுமின்றி இந்தி மொழி பேசாத மாநிலங்களில், மும்மொழி கொள்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், தாய்மொழி, ஆங்கிலம் உடன் இந்தியை கண்டிப்பாக பயிற்றுவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்தி பேசா மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், இந்தி கண்டிப்பாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வரைவு குறித்து ஜூன் 30-ந் தேதி வரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் யோகா, நீர்மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து கருத்துக்கள் தெரிவிக்க விரும்புவோம் nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்தான் ( மே 30ந்தேதி) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ரமேஷ் பொக்ரியால், சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்தவர்.
தற்போது மத்திய கல்வி அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே புதிய கல்வி கொள்கை பரிந்துரை களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.