நெட்டிசன்

கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி

தொலைநுட்பத்தின் தொல்லைகள்

வானளாவிய தொலைநுட்பம் வாழ்வின்
வளர்ச்சிப் பணிக்கு உதவுமென்று இருக்க
வந்ததென்னவோ தொல்லைகளே அது
தந்ததென்னவோ துக்கமும் துயரமுமே

கணித பொத்தான் முதலில் வந்தது
கணக்காளர்கள் வாழ்விழந்து போயினர்
கணித மரபு கைநழுவிப் போயிற்று
காகிதமும் கடிதமும் இல்லாமல் ஆனது

காலச்சக்கர சுழற்சி இருந்தும்
கடிகாரங்கள் காணாமல் போயின
நாட்காட்டிகள் மறைந்து போவதற்கு
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன

கணனி ,மடிக்கணனி அடுத்து வந்தது
கலாச்சார சீர்கேடுகளும் கூடவே வந்தது
வலைத்தளங்கள் முகநூல்களும் வந்தது
வரம்புமீறி பழைய பண்பாடு சீர்குழைந்தது

கைப்பேசியும் வந்தது மனிதரை
கையாலாகாதவராய் மாற்றி விட்டது
கைப்பேசிகளை கைகளில் ஏந்தி அவர்கள்
காடசிப் பொருளாய் நடமாடுகின்றனர்

உறவுகள் வீடுதேடி வந்த போதும்
உரையாடல்கள் இல்லாமல் போனது
உலகமே எம்கைக்குள் என்றனர் ஆனால்
உணர்வுகள் அற்று வாழத் தொடங்கினர்

மனதார பேசி மகிழ்ந்த நிலமை மாறி
மௌனமாய் குறும் செய்திகள் வந்தன
அதுவும் கை காலென படங்களாய் மாறி
அந்த கற்பனையில் பேச்சுகள் குறைந்தன

மூளை முற்றிலுமாய் மழுங்கிப் போனது
முழுவேக உழைப்பும் சுணங்கிப் போனது
முன்னேற்றம் என்ற முகமூடி அணிந்து
மூலைகளில் சிறார்கள் முடங்கிப் போயினர்

உணவு பழக்கங்கள் மாறிப் போயின
உடற்பயிற்சிகளே இல்லாமல் போனது
மன உளைச்சலில் இளைய சமுதாயம்
மரணத்தை நோக்கிய அவர்கள் பயணம்

ஏமாற்றும் குற்றங்களும் பெருகின
ஏமாறும் மக்களும் பெருகினர்
ஆக்கப்பூர்வமான அறிவும் ஆற்றலும்
அழிவுப் பாதையில் ஒளிந்து கொண்டான

இயற்கையின் நியதிகள் மாற்றப்பட்டு
இயந்திரகதியாய் ஆன இன்றைய வாழ்வில்
இனி உலகம் எப்படி சுழலப் போகிறது
இனி அதன் விதி எப்படி அமையப் போகிறது.

——