தூத்துக்குடி: சொகுசு கார்களில் வந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி ஓட்டல்களில் விற்பனை செய்து வந்த பலே கில்லாடி திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆடுகளை திருட பயன்படுத்தி வந்த 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மட்டன்கடை அதிபர் உள்பட மேலும் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள பல கிராமங்களில் அவ்வப்போது ஆடுகள் காணாமல் போனது. இதுதொடர்பாக பல கிராமத்தினர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஆடு திருடன்களை கண்டுபிடிக்க விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தனிப்படையினர், ஆடுகள் காணாமல் போன கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை வாங்கி வந்து ஆய்வு செய்தனர். மேலும் வேம்பார், தூத்துக்குடி உள்பட பல பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் அதிரடி வாகன சோதனைகளையும் செய்து வந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி விளாத்திகுளம் நெடுஞ்சாலையில் வேம்பார் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு கார் ஒன்றை சோதனை செய்தபோது, கார் டிக்கியில் சில ஆடுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தகாரில் இருந்த 2 பேரையும் மடக்கிய காவல்துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் யெர் செல்வராஜ் (55) மற்றொருவர் ஆறுமுகம் (52) என்றும், அவர்கள் 2 பேரும் சேர்ந்துசொகுசு காரில் அங்கிருந்த வந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் சில கிராமப்பகுதிகளுக்கு சென்று, மேய்ச்சலில் உள்ள ஆடுகளை, அதன் உரிமையாளர்களுக்கு தெரியாதவாறு திருடிச் சென்று, ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த திருட்டு கும்பல் சிவங்ககை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் இதுபோன்று ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, திருடி வரும் ஆடுகளைஇ சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் மட்டன் கடை நடத்தி வரும், முகம்மது நாசர் என்பவரின் மகன்களான முகம்மது அராபத் மற்றும் ஆசிக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்த திருட்டுக்கு, மட்டன் கடை ஓனர் முகம்மது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், ஆசிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளை திருடி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 20 இடங்களில் ரூ.10,10,000 மதிப்புள்ள 101 ஆடுகளை திருடி இருப்பது கண்டுபிடிக்ப்பட்டு உள்ளது.
ஆடு திருடர்கள் 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மற்றும் 14 ஆடுகள், 3 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த திருட்டு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காரைக்குடி மட்டன் கடை அதிபர், முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இந்த தொடர் ஆடு திருட்டு சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆடு திருட்டு கும்பலையும், அதை வாங்கி விற்பனை செய்துவந்த மட்டன் கடை உரிமையாளர்களையும் கைது செய்ததுடன், 14 ஆடுகளை மீட்ட விளாத்திகுளம் காவல் துண கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.