ரியோ:
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழர் எவரும் பதக்கம் வெல்லைவில்லை என்று வருந்துவோருக்கு ஒரு ஆறுதலான விஷயம். அந்த ஒலிம்பிக்கை நடத்தும் பெருமைக்குரிய ஏற்பாட்டாளர்கள் குழுவிலேயே ஒரு தமிழர் இடம் பெற்றிருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சுலைமான். இவர் ஒரு சர்வதேச மராத்தான் ஓட்டப்பந்தய வீரராவார். மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற பல்வேறு மராத்தான் போட்டிகளில் பங்கேற்றவர். இவருக்குத்தான் ரியோ ஒலிம்பிக் ஆர்கனைசிங் கமிட்டியில் பணியாற்றும் பெருமைக்குரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த 2,000 பேருடன் இணைந்து பணியாற்றி போட்டிகளை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்தது தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற அனுபவம் என்கிறார் அகமது சுலைமான்.
பிரேசிலின் கலாச்சாரம் வேறுபட்டதாக இருந்தாலும் அம்மக்கள் பழகுவதற்கு இனிமையான வர்கள். ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் கமிட்டியில் இடம்பெற மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மிகவும் கடினமானவை. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பல கட்ட தேர்வுகளுக்குப் பின் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கிடைத்தும் அந்த மகிழ்ச்சியை முழுமையாக கொண்டாட முடியாத அளவுக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விரைவில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் தாம் ஏற்பாட்டாளராக பணியாற்றவிருப்பதாக சுலைமான் தெரிவித்துள்ளார்.