சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக மத்தியஅரசு உயர்த்தி நிலையில், அதை உறுதிப்படுத்திய தமிழ்நாடு அரசு, அதற்கான நிதிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
அடித்தட்டு மக்களையும் பொருளாதாரத்தில் பங்களிக்க வைக்கும் விதத்தில் வேலைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மத்தியஅரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
இந்த திட்டத்தின்படி பயனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு மார்ச் 28ந்தேதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதில், தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.28 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்படுகிறது. வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், இந்த ஊதிய உயர்வு அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. ஆனால், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்து உள்ளதால், ஊதிய உயர்வு தொடர்பானஅரசாணையை தமிழ்நாடு அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 2024-25ம் ஆண்டில் தமிழகததுக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொாழிலாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்துக்கு கடந்த ஏப்ரல் 25ம் தேதி மத்திய அரசு ஒதுக்கியது.இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் 75 சதவீதம் நிதியான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 ஐ பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார்.
இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் நிதி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழை உரிய விதிகள் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,”