காபூல்:

காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான்  பயங்கரவாத  அமைப்பு கடந்த 16 வருடங்களாக போரில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.  அந்த அமைப்பு பொதுமக்கள் மீதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தலீபான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்துள்ளது.  ஆனாலும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தலீபான் தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், காபூல் நகரில் இன்று காலை 9.10 மணியளவில் வெடிகுண்டு வைக்கப்பட்ட கார் ஒன்று  வெடித்தது.    இச்சம்பவத்தில் பொதுமக்களில் இருவர் பலியானார்கள். மேலும்  பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் அதிக அளவில் பணிக்கு செல்லும் நேரத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது.  பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆப்கான் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில்,  தலீபான்கள் அமைப்பு இந்த தற்கொலைப்படை தாக்குதலை  நடத்தியது,  ஆப்கான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டமே என்று கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 9 ஆம் தேதி  ஐஎஸ்  பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில், 9 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.