டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையர்கள் நியமனத்தக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்தியஅரசு சமீபத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில், ஏற்கனவே இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயர் நீக்கப்பட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட சிலரை நியமனம் செய்திருந்தது. அதாவது, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் கொண்ட குழு இரண்டு தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோரை தேர்வு செய்தது. அதன்படி பிரதமர் மோடி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்), அமித் ஷா ஆகியோர் கொண்ட குழு நியமனம் செய்தது. அதன்படியே தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த இரு ஆணையர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தவறானது. ஆகையால் புதிய ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு, “தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க முடியாது. அப்படி தடைவிதித்தால் இந்த நிலையில் அது குழப்பத்தை ஏற்படுத்திவிடும். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து மீது குற்றுச்சாட்டு ஏதும் இல்லை. நிர்வாகிகளின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம் என்று உங்களால் கூற முடியாது” தெரிவித்தனர்.
இந்j நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்தல் ஆணையர் நியமனம் விவகாரத்தில் மனுதாரர் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்களின் தகுதி குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவும் மனுதாரர் தவறிவிட்டார். தலைமைத் தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்புதான். இந்த ஆணையம் தேர்தல்களை நடத்துவதில் மட்டுமே தனது பணிகளைச் செய்கிறது என குறிப்பிட்டுள்ளது.