டெல்லி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் (LMV License) 7500 கிலோ எடை வரையிலான வாகனங்களை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கார் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள், 7500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களையும் இயக்க அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து வாகனங்களை, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமத்தை கொண்டே இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஒருவர் போக்குவரத்து வாகனங்கள் ஓட்டுவதை 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த 2017-ல் சாத்தியமாக்கியது. இதற்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில் “எல்எம்வி உரிமம் வைத்துள்ள ஒருவரை பேருந்து, லாரி அல்லது ரோடு ரோலர் ஓட்ட அனுமதிக்கும் முடிவானது குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சுமையை அதிகரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நவம்பர் 6ந்தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
அதன்படி, இலகுரக மோட்டார் வாகனத்துக்கான (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவர் 7,500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள வணிகப் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில், 7500 கிலோ எடைக்குள் இருக்கும் போக்குவரத்து வாகனத்தை இயக்க, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 7500 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்கும் போது மட்டுமே, போக்குவரத்து வாகனங்களுக்கு உரிய விதிமுறைகள், நிபந்தனைகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.