வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொருத்தமான நேரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

வக்ஃப் திருத்த மசோதாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சனிக்கிழமை கையெழுத்திட்டார். மக்களவை மற்றும் மாநிலங்களவை முறையே ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மசோதாவை நிறைவேற்றின.

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் டெல்லி எம்எல்ஏ அமானத்துல்லா கான் ஆகியோர் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம், ஜமியத் உலமா-இ-ஹிந்த், சமஸ்தா கேரள ஜமியத் உலமா போன்ற அமைப்புகளும் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ஏ.எம். சிங்வி, இந்த வழக்கை அவசர விசாரணைக்கு பரிசீலிக்க வேண்டும் என்று கோரினர்.

இந்தச் சட்டம் முஸ்லிம்களின் மத சுதந்திரத்தைப் பறிக்கும் சதி என்றும், இது சட்டவிரோதமாகத் திருத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 21, 25, 26 மற்றும் 300-A ஐ மீறுவதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.