டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை தொடர்ந்து வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.
நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ, விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில், பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக பதில் அளிக்க மத்தியஅரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது. தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜூலை 5 மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஜூலை 8 அன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “கருணை மதிப்பெண்களை பெற்ற 1563 மாணவர்களில் எத்தனை பேர் தவறாக வினாத்தாள் கொடுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு நீட் ரத்து கோரிய மனுதாரர்கள் தரப்பில், “நியாயமற்ற முறையில் தேர்வு எழுதிய ஒரு நபரைக் கூட மேற்படி தேர்வு எழுத அனுமதிக்க கூடாது. தேசிய தேர்வுகள் முகமை இந்த விவகாரத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. இந்த வழக்கில் organized கிரிமினல் கும்பலின் தலையீடு இருப்பது பீகார் போலீசாரால் கண்டறியப்பட்டது.
67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில், 6 பேர் ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். இது சாத்தியமில்லாத ஒன்று. தமிழ்நாடு உள்ளிட்ட 4 உயர்நீதிமன்றங்கள் நீட் தொடர்பான வழக்கில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அதில் systematic fault உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் யார் முறைகேட்டில் ஈடுபட்டு மருத்துவம் படிக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினம் என உயர்நீதிமன்றங்கள் கூறியுள்ளன” என தெரிவித்தனர்.
தொடர்ந்து, தலைமை நீதிபதி, “நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்பு கொள்கிறீர்களா?” என தேசிய தேர்வுகள் முகமையிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தேசிய தேர்வுகள் முகமை, “ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது” என பதிலளிக்கப்பட்டது.
தொடர்ந்து, நீட் ரத்து கோரிய மனுதாரர் தரப்பில், “நீட் தேர்வு வினாத்தாள்கள் செல்போன்களில் கசிந்துள்ளது. பள்ளிக்கூடங்களில் இருந்த பிரிண்டர்களின் அவை பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டினர்.
இதற்கு தலைமை நீதிபதி, இரண்டு விதமான வினாத்தாள்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டது? நிபுணர்கள் தயாரித்தால், ஒரே நிபுணர்கள் குழு இரண்டு விதமான வினாத்தாளை தயார் செய்ததா? நீட் தேர்வு கேள்வித்தாள் எப்போது பாரத ஸ்டேட் வங்கி, கனரா பேங்க் லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டது? எப்போது திறக்கப்பட்டது? வினாத்தாள்கள் எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டது? எப்படி அனுப்பப்பட்டது? ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டார்.
தொடர்ந்து, ”தற்போதைய நிலையில் வினாத்தால் கசிவு என்பது நிரூபணமாகியுள்ளது என்பதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டாக வேண்டும். கசிந்த கேள்வி தாள் எந்த அளவுக்கு பரவலாக மாணவர்களை சென்றடைந்துள்ளது என்பதை கண்டறிவது முக்கியம். எத்தனை FIRகள் பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் இந்த வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என” நீதிபதி தெரிவித்தார்.
மேலும், “வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? பல ஆண்டுகள் படித்து மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மீண்டும் மறுத்தேர்வு என்பதும் மாணவர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும். எனவே வினாத்தாள் கசிவின் விதத்தை கண்டறிய வேண்டியுள்ளது. வினாத்தாள் கசிவால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் எத்தனை மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன? அவை ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதுமட்டுமல்லாது “இந்த விவரங்கள் தற்போது வரை கண்டறியப் படவில்லை என்றால் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். ஆனால் அதன் விளைவு 24 லட்சம் மாணவர்களை பாதிக்கும். இப்போது வினாத்தாள் கசிவு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்குமேல் இதுபோன்ற வினாத்தாள் கசிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். தேர்வை ரத்து செய்யப் போவதில்லை என்று வைத்துக் கொண்டு, மோசடி செய்த பயனாளிகளை அடையாளம் காண தற்போது என்ன செய்ய போகிறோம்?
அந்த மோசடி பயனாளிகளை அடையாளம் காண அரசு இதுவரை என்ன செய்தது? கேள்வித்தாள் கசியவில்லை என்று தொடர்ந்து மறுப்பது மேலும் பாதிப்பை தான் ஏற்படுத்தும்” என தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “விசாரணை முடியாவிட்டால் மறு தேர்வு நடத்துவதை தவிர வேறு வழி இல்லை. வினாத்தாள் கசிவு மோசடியை சைபர் விசாரணை குழுவால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் உள்துறை அமைச்சகத்தின் forensic குழுவின் உதவியை நாட வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, வழக்கு ஜூலை 11-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை மத்திய அரசு மற்றும் சிபிஐ ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ‘நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இதேபோல நீட் நுழைவுத் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘தேசிய, மாநில, நகரம், மையங்களின் அடிப்படையில் நீட் மதிப்பெண்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய தலையீடும் இல்லை. இதன்மூலம் நீட் தேர்வில் பெரும் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.