இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தினசரி பாதிப்பில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது, இன்று ஒன்றே நாளில் 3,46,786 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு, சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இட தட்டுப்பாடு என்று திரும்பிய பக்கம் எல்லாம் கடந்த ஒரு வாரமாக உயிரை காப்பாற்ற வேண்டி மக்களின் ஓல குரல் எழுந்துவருகிறது.
மருத்துவமனைகளில் இடம் பெற இடைத்தரகர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கும் அவலமும், பிணங்களை எரிப்பதற்கு டோக்கன் முறையும், ஆயிரக்கணக்கில் பணமும் பறிகொடுக்க வேண்டிய நிலைமை நிர்வாகம் சீரழிந்து விட்டதையே காட்டுவதாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்கள் எட்டு தனி ‘ஜெட்’ விமானங்களில் உயிர்பிழைக்க நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பியோடிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘தி டெய்லி பீஸ்ட்’ வெளியிட்டிருக்கும் செய்தியில், 23ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்திய விமானங்கள் பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது, தடை விதிக்க சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த விமானங்கள் லண்டன் சென்றடைந்ததாகவும், இதில் கடைசியாக சென்ற விமானம் துபாயில் இருந்து மும்பை வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு லண்டனில் அதிகாலை 3:15 மணிக்கு தரையிறங்கியது என்று குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இங்கிலாந்து நாட்டு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி 10 நாட்கள் அரசு அங்கீகரித்த விடுதிகளில் தனிமைப்படுத்தபடுவார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து வேறு தகவல்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இருந்தபோதும், இந்தியாவில் மக்கள் கொத்துகொத்தாக உயிரிழந்து கொண்டிருக்கும் வேலையில், இந்தியாவில் உள்ள மக்களை சுரண்டி கொழுத்த பெரும் பணக்காரர்கள் தனி விமானங்களில் லண்டன் தப்பி சென்றதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.