சென்னை: பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெல்லலாம் “ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்” என உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிங்கப்பூரில் நடைபெற்று முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் உடன் மோதினர். 13 சுற்றுப் போட்டிகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வெற்றியை பெற்றிருந்தனர். மீதம் நடந்த 9 போட்டிகள் டிராவில் முடிவடைந்ததால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் இருந்தனர். கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரன் வெள்ளி நிற காய்களுடன் ம், குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். மிகவும் நிதானமாக நடைபெற்ற இந்த சுற்றில், கடுமையான சவால்களை இருவரும் எதிர்கொண்ட நிலையில், இந்த போட்டி டிரா ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், 55வது நகர்த்தலில் டிங் லிரன் தோல்வியை ஒப்புக்கொள்ள, தமிழ்நாட்டின் குகேஷ் வெற்றி பெற்றார்.
இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார். அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசும், பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
அதன்படி, நேற்று (17.12.2024) சென்னை, கலைவாணர் அரங்கில் உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது. இதில், குகேஷ்க்கு முதலமைச்சர் ரூ.5 கோடிக்கான காசோலை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை, “நம்முடைய குகேஷை” நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! புகழ் மாலை சூட்டுகிறேன்!
சீன நாட்டை சேர்ந்த சாம்பியனை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார், நம்முடைய குகேஷ்! புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்முடைய பையன், சென்னை பையன்! அதனால்தான், இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது! இங்கே எதிரே அமர்ந்திருக்கக்கூடிய அவருடைய பெற்றோரைப்போல தான் நானும் மகிழ்ச்சியிலும், பெருமையிலும் இருந்து கொண்டிருக்கிறேன்.
வெற்றி பெற்றதும் குகேஷ் கொடுத்த ஒரு பேட்டியைப் பார்த்தேன்… படித்தேன். “விளையாட்டுத் திறமையோடு சேர்ந்து சிறந்த குணம், மன உறுதி ஆகியவையும் இணைந்தால்தான், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்று அவர் சொல்லி இருந்தார். அவர் சொன்ன விளையாடும் திறன், சிறந்த குணம், மனஉறுதி மட்டுமல்ல… எப்போதும் புன்னகையோடு இருக்கும் அவரின் முகமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் தான், அந்த வெற்றிக்கு காரணம்!
உலகின் இளைய செஸ் சாம்பியனாக மாற வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் நனவாக்கியிருக்கிறார். ஏழு வயதில் பயிற்சிக்குள் நுழைந்து, 9 வயதில் ‘கேண்டிடேட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, 12 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, இன்று உலகச் செஸ் சாம்பியன் ஆகிவிட்டார்.
இதையெல்லாவற்றையும் சாதிக்க நம்முடைய குகேஷ் எடுத்துக்கொண்டது, வெறும் 11 ஆண்டுகள்தான்! இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் இவையெல்லாமே நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோருக்கும் Inspiration-ஆக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! அதற்காகத்தான் உங்களையெல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழாவை நடத்துகிறோம்.
“ஒரு குகேஷின் வெற்றி, இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்!” குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனதை பாராட்டும் வகையில், அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறோம். இந்த மேடையில் அதை வழங்கி இருக்கிறோம்.
2001-ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாக இங்கிருக்கும் நம் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் பரிசு பெற்றார். அவரைப் பாராட்டும் வகையில், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இதேபோன்ற ஒரு பாராட்டு விழாவை சென்னையில் நடத்தினார். தெற்காசிய விளையாட்டுப் போட்டி நகரில், ஆனந்த் அவர்களுக்கு வீடு வழங்கிப் பாராட்டினார் முதலமைச்சர் கலைஞர். 2007-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வென்றபோது, 25 இலட்சம் ரூபாய் நிதி வழங்கி, பாராட்டினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டங்கள் பெற்றபோதும் சரி – இப்போது குகேஷ் உலக சாம்பியன் ஆகும்போதும் சரி – அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, பாராட்டி பெருமைப்படுத்தும் வாய்ப்பு நம்முடைய கழக அரசுக்கு கிடைத்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தி.மு.க. அரசு என்பது, விளையாட்டுத் துறையையும், விளையாட்டு வீரர்களையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் அரசு! அதனால்தான், நம்முடைய அரசு பொறுப்பேற்றது முதல், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டில், விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! அதில் Highlight-ஆக சிலவற்றை மட்டும் சொல்லவேண்டும் என்றால், விளையாட்டுத் துறையில் நம்முடைய அரசின் முதல் மிகப்பெரிய வெற்றியே, 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியது மூலமாக கிடைத்தது!
இந்தப் போட்டியின் தொடக்க விழாவையும், செஸ் வீரர்களுக்கு நாம் வழங்கிய விருந்தோம்பலையும், நிறைவு விழாவையும் உலகம் முழுவதும் பாராட்டினார்கள்! அந்த விழாக்கள் தமிழ்நாட்டின் வரலாற்றையும், பெருமையையும் நம்முடைய திராவிட மாடலின் அடித்தளத்தையும் இந்த உலகத்திற்கே எடுத்துக்காட்டியது!
அதுமட்டுமல்ல, உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப், ஸ்குவாஷ் உலகக் கோப்பை, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி, உலக அலைச்சறுக்கு லீக், HCL சைக்ளோத்தான், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் – இப்படி ஏராளமான போட்டிகளை ‘Host’ செய்து எல்லோருடைய பாராட்டுகளையும் நாம் பெற்றிருக்கிறோம்!
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டங்களை பொறுத்தவரைக்கும், 56 செஸ் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 3 ஆயிரத்து 345 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, விளையாட்டு வீரர்களுக்கு “Champions Kit”, தமிழ்நாட்டின் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளுக்கும், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள்! சென்னையில் Boxing Academy, ‘Tamil Nadu Champions Foundation’ இப்படி ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகின்ற காரணத்தால், இப்போது இளைஞர்கள் Sports-யை அவர்கள் வாழ்க்கையாக எடுத்து, ஜெயிக்கிறார்கள்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எல்லோருக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக 7 இலட்சம் ரூபாய் வழங்கினோம். பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய் வழங்கினோம். இப்படி சிறப்பாக செயல்படுவதால்தான், ஒன்றிய அரசின் பல்வேறு விருதுகளும், பல்வேறு அமைப்புகளின் அங்கீகாரங்களும் நம்முடைய தமிழ்நாட்டை நோக்கி வருகிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், “விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக” சி.ஐ.ஐ. அமைப்பு தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறது. தி இந்து ‘Sport Star Aces’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2023-ஆம் ஆண்டுக்கான “விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம்” விருது தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி இந்தியாவின் ‘Sports Capital’ என்று தமிழ்நாட்டை சொல்லும் அளவுக்கு விளையாட்டுத் துறையை சிறப்பாக கவனித்து வரும் துணை முதலமைச்சர் . உதயநிதி அவர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! அவருக்கு துணையாக செயல்படும் அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுக்கள்!
செஸ் விளையாட்டை பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது என்னவென்றால், இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இப்படி இன்னும் பல திறமை வாய்ந்த சதுரங்க வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்க, உருவாக்க, ஒரு திட்டத்தை இந்த விழாவின் மூலம் நான் அறிவிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென “Home of Chess” என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
குகேஷின் வெற்றி கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இந்தச் சிறப்பு அகாடமி ஆகியவற்றால் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இது குகேஷுக்கான பாராட்டு விழா மட்டும் கிடையாது; விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் விழா இது! எதிர்காலத்தில் இந்த மேடையில் உங்களுக்கான பாராட்டு விழாக்கள் நிச்சயம் நடைபெறும்!
கல்வி, விளையாட்டு இரண்டிலும் நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதிக்கவேண்டும்! அதனால்தான், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என்று உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
நம்முடைய திராவிட மாடல் அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை மாணவர்களும், இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! செஸ் என்பது வெறும் Mind Game மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான ஏராளமான பாடங்களை வழங்கக்கூடியது! இங்கு செஸ் விளையாட்டின் நுணுக்கங்கள் தெரிந்த பல பேர் இருக்கிறீர்கள். எனக்கு ஓரளவு தெரியும். உங்களுக்கு நன்றாகத் தெரியும்… வெற்றிக்காக சில நேரங்களில் செஸ் காயின்களில் மிகவும் சக்தி வாய்ந்த ராணியை கூட தியாகம் செய்ய வேண்டியிருக்கும்… நாம் விரும்பி நம்முடைய காய்களை வெட்டுக்கு கொடுத்து, வெற்றியைப் பெறுவோம்! அதுபோல, வாழ்க்கையில் வெற்றி பெற, நம்முடைய இலட்சியத்தில் வெற்றி பெற நாம் எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்கவேண்டும்!
அதேபோல், செஸ் விளையாட்டில் ஆற்றல் குறைந்த காய் என்னவென்று கேட்டால், அது சிப்பாய்! ஆனால், பொறுமையாக சரியான Move-களை செய்தால், அந்த சிப்பாயை கூட சக்தி வாய்ந்த ராணியாக மாறிவிடும்! அதுபோல, நமக்கும் பொறுமை, விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெல்லலாம்!
நம்முடைய இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை; பங்கேற்பதுதான் முக்கியம்! பங்கேற்பதே பெரிய வெற்றிதான்! எனவே, போட்டி போடுங்கள், நீங்கள் யார் என்று காட்டுங்கள்! கொரட்டூரில் பிறந்த குகேஷ் இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்த வரலாறு உங்களுக்கு வழிகாட்டட்டும்!
உழைப்புதான் சாதனையாளர்களை உருவாக்குகிறது! வாழ்க்கை உங்களுக்கு வைக்கும் ஒவ்வொரு ‘Check’-கும், ஒரு பாடம்! எனவே, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்; உழைப்பை செலுத்துங்கள்; வெற்றி பெறுங்கள்! என்று சொல்லி, மீண்டும் ஒருமுறை உலக செஸ் சாம்பியன் குகேஷை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு கூறினார்.