டெல்லி:
டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் சுமார் 200பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
சமீபத்தில் டெல்லி தப்லிக் நிஜாமுதீன் மார்க்ஸ் என்ற மசூதியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துள்ள நிலையில், மரணம் அடைந்த சிலர், டெல்லி நிஜாமுதீன் மார்க்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து உஷாரான மத்தியஅரசு, அங்கு சோதனை செய்ததில் மேலும், அங்கு ஏராளமானோர் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் குறித்து தகவல் சேகரித்து, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த கலந்து கொண்ட 4,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியில் அனைத்து மாநில அரசுகளும், ஒரு யூனியன் பிரேதேச நிர்வாகமும் மும்முரம் காட்டி வருகிறது.
டெல்லியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. அதுபோல தெலுங்கானா மாநிலத்தில் மரணமடைந்த 6 கொரோனா நோயாளிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றதும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் 711 பேரை அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் குறைந்தபட்சம் 400 பேர் கூட்டத்தில் பங்கேற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 78 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 800 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், 19 மாவட்டங்களைச் சேர்ந்த 157 பேர் சபையில் நிஜாமுதீன் மார்க்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் 73 பேர் கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிகின்றது.
மகாராஷ்டிரா மாநில சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில்,டெல்லி மார்க்கஸுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை துல்லியமாக எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து 1,131 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும், அவர்களில் 515 பேர் அடையாளம் கணப்பட்டு இருப்பதாகவும், மாநில தலைமைச் செயலாளர் கே. சண்முகம் தெரிவித்து உள்ளார். மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். பலரின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப்ல் உள்ளது. முகவரிகளும் தவறாக உள்ளது. உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.