சென்னை: 8 வீடுகள் கொண்ட 3 மாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது,” என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ மாநில மாநாட்டில், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் 3 அடுக்கு மாடிகளுக்கு மேல் கொண்ட கட்டிடத்தை கட்ட வேண்டுமென்றால் அதற்கு சிஎம்டிஏ அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல 800 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் கட்டப் படும் கட்டிடத்துக்கும் சிஎம்டிஏ அனுமதி அவசியம். இதனைவிட சிறிய கட்டிடங்களுக்கான அனு மதியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் பெற்றுக்கொள்ள லாம். சிஎம்டிஏ அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடமானாலும் பணி நிறைவு சான்று பெற வேண்டும்.
இந்த நிலையில் பலர் சிஎம்டிஏ அனுமதியை பெறாமலோ அல்லது சிஎம்டிஏ அனுமதி பெற்று, சில விதிமீறல்களுடனோ கட்டிடங்களை கட்டுகின்றனர். தற்போது கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பணிநிறைவு சான்றிதழ் கேட்டு உரிமையாளர் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்திருந் தால் பணிநிறைவு சான்று வழங் குவர். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவற்றை பெற இந்த பணிநிறைவு சான்று அவசியம். ஆனால், நடைமுறையில் பணிநிறைவு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பலர் பணி நிறைவு சான்றிதழ் பெறாமலேயே, தங்களது தேவைகளை கையூட்டு கொடுத்து அதிகாரிகள் துணையுடன் பெற்றுக்கொள்கின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, மூன்றாம் நபர் மூலம் பணிநிறைவு சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத் தலாம் என்று மத்தியஅரசு யோசனை தெரிவித்தது. அதன்படி, கட்டிடங் களை கட்டித்தரும் கட்டிடக்கலை வல்லுநரே பணிநிறைவு சான்று வழங்கலாம். அவ்வாறு வழங்கும் போது விதிமீறல்கள் குறித்து அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகள் இருந்தால் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று கூறப்பட்டது. மேலும், பணிநிறைவு சான்றிதழ்களை கட்டிடக்கலை வல்லுநர்கள் வழங்கினாலும், அவ்வப்போது சிஎம்டிஏ அதிகாரிகள் (ரேண்டம் முறையில்) ஆய்வு செய்வார்கள். ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பணிநிறைவு சான்று வழங்கிய கட்டிடக்கலை வல்லுநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பல்வேறு சிக்கல்கள் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ மாநில மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் முத்துசாமி, 8 வீடுகள் கொண்ட 3 மாடி குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது‘ என தெரிவித்தார்.
தற்போது, பொதுகட்டட விதிகளின்படி, 8,000 சதுர அடி அல்லது, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதை, எட்டு வீடுகள் என்று மாற்றுவதற்கான உத்தரவு, விரைவில் வெளியிடப்படும். கட்டுமான திட்ட அனுமதிக்கு, ஒற்றை சாளர முறையை, எந்த சிக்கலும் இல்லாமல் அமல்படுத்த தயாராகி ருகிறோம்.
எப்.எஸ்.ஐ., மாற்றம் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள், தேவையான அனைத்து ஆவணங்களையும், விபரங்களையும் உரிய முறையில் அளித்தால், முடிவு எடுப்பதில்தாமதத்தை தவிர்க்கலாம். பெரும்பாலான திட்டங்களில், விண்ணப்பதாரர் தரப்பில் அலட்சியமாக இருப்பதும் தாமதத்துக்கு காரணமாகிறது.
சாதாரண குடியிருப்பு கட்டடங்களின் உயரம், பொது கட்டட விதிகளில், 39 அடியாகஉள்ளது. இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் வைத்து, இந்த உயரத்தை, 45 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, சாலை அகல அடிப்படையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கான, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டை உயர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக, உரிய உத்தரவுகள் விரைவில் வெளியாகும்.
கர்நாடகாவில் உள்ளது போன்று, உரிமையாளரின் சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்யும் போதே, விதிமீறல் அதிகமாக வருகிறது. உரிமையாளர்கள் பொறுப்புடன் நடக்க முன்வந்தால், 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, இந்நடைமுறையை செயல்படுத்துவது குறித்துபரிசீலிக்கலாம்.
புதிய திட்டங்கள் தமிழகத்தில், 7 சதவீத பகுதிகளுக்கு மட்டும் தான் முழுமை திட்டம் உள்ளது. இதை, 19சதவீதமாக அதிகரிக்கும் வகையில், எட்டு நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர், ஊரமைப்பு துறை இயக்குனர் பி.கணேசன், கிரெடாய் தேசிய துணை தலைவர் ஸ்ரீதரன், தமிழக பிரிவு தலைவர் இளங்கோவன் உள்பட ஏராளமான கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.