சேலம்: சேலம் மாவட்டத்தில், உடன்பிறந்த சகோதரரால் உயிருடன் ‘பிரிஷர் பாக்சில்’ வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் அருகே கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணிய குமார் (வயது 74). இவருடைய தம்பி சரவணன் (70). இவர்களின் தங்கை மகள்கள் ஜெயப்பிரியா, கீதா. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நிலை பாதித்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்தன்று, பாலசுப்பிரமணிய குமார்  தம்பி சரவணன், தனது அண்ணனை  மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். ஆனால், தனது அண்ணன் இறந்துவிட்டதாக அந்த பகுதி மக்களிடம் உறவினர்களிடமும் கூறியதோடு, உயிரோடு இருந்த குமாரை, இறந்தவரின் உடல் வைக்கும் குளிர்சாதன பெட்டியான பிரிஷர் பாக்சில் வைத்தார்.

நோய் காரணமாக மயக்கத்தில் இருந்த குமாரும், உடல் அசைவற்ற நிலையில், குளிரால் மேலும் பாதிக்கப்பட்டு, இறந்தவர்போல காட்சியளித்தார். அடுத்த நாள் இறுதிசடங்குக்காக பிரிஷர் பாக்ஸை அகற்ற முயன்றதால்,  குமார் கண் விழித்ததால், சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சிலர்  முதியவரை மீட்க முயன்றனர். அப்போது சரவணன் அவர்களை தடுத்தார். இதனால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சூரமங்கலம் போலீசார் வந்து குளிர்பதன பெட்டியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.  இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  குமார்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணிய குமார் தமபி சரணவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  உயிருடன் உள்ள அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்ததற்காகவும் 2 பிரிவுகளின் கீழ் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.