நெட்டிசன்:
பத்திரிகையாளர் Na Bha Sethuraman Sethu முகநூல் பதிவு
·
சோத்துக்கு கமர்ஷியலிலும், மனசுக்கு இலக்கிய சிற்றிதழ்களிலும் ஓய்வில்லாது எழுதிக் கொண்டிருந்த காலம் அது…
அய்யா சுரதா உள்ளிட்ட ஜாம்பவான்களோடு ஒட்டிக் கொண்டிருந்த காலகட்டமும் அது… யாரைப் பார்த்தாலும், “பிறந்தநாளு இருக்கட்டும், உங்களோட சிறந்தநாளு எது ? எனக்கு சிறந்தநாளு, நான் பாரதிதாசனைச் சந்தித்த நாளு” என்பார் ஆசான் சுரதா ! ‘சிறந்த நாளை விசிட்டிங் கார்டுலயே போட்டுக்குங்க சரியா’ என்றும் வலியுறுத்துவார்…
அய்யா சுரதாவுடன் நெருக்கமான ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அவரிடமிருந்து ஒருநாள் கடிதம் ஒன்று வந்திருந்தது… காலையில் தானே அண்ணன் புலமைதாசன் வீட்டில் அய்யாவைச் சந்தித்தோம், இதுபற்றி ஒன்றும் சொல்ல வில்லையே என்ற குழப்பம்…
அடுத்தநாள், அய்யாவைப் பார்த்ததுமே, அதைப்பற்றிக் கேட்டு விட்டேன்… “ஆமாம், நான்தான் கடிதம் அனுப்பினேன், கடிதமா எதையும் சொல்லிட்டா அது ஆவணமாகிடுதுல்லே, எனக்குத் தலையாயக் கவிஞன் பாரதிதாசன் கிட்டே நான் கத்துக்கிட்ட பாடம் இது… நூத்துக் கணக்குல அவரு எனக்கு கடிதம் போட்டிருக்காருல்ல” என்று சொல்லிவிட்டு குழந்தையை போலச் சிரித்தார்.
இந்தக் கடிதத்தின் சிறப்பு என்னவென்றால் அவருடைய பிறந்தநாளன்று எனக்கு எழுதப் பட்டிருக்கிறது… அந்த நாளைக் குறிப்பிட்டு அதையும் ஆவணம் ஆக்கியிருக்கிறார், அய்யா சுரதா…
#காதல்மட்டும்தானா ?
தாய்மை, கடல், இயற்கை, கவிதை, துரோகம், அவமானம், நட்பு, பாராட்டு, எதிர்பார்ப்பற்ற அன்பு, வாசிப்பு, கல்வி, வெகுமதி, பாட்டிக்கும், மழலைக்குமான பொக்கை வாய்ச் சிரிப்பு என்று நேசிப்புக்குரிய பல, அவரவர் வாழ்க்கையில் இருக்கிறது…
இந்தக் கடிதமும் அதில் ஒன்றாய் இருக்கிறது…
கரையான்களுக்கு நன்றி!