கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கும் பணி செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் நிறைவடைந்தது. மறுபுறம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை, வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரம் கிளாம்பாக்கத்தில் புறநகர்  பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளும், இதேபோல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் மூலம் வரும் பயணிகள் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கத்தில் இறங்கி நடந்தே வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

இதைடுத்து,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்படும் தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் அறிவித்தார். மேலும், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பல கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரையில் மேம்பாலம் அமைக்கும் படி, ₹74.50 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டது. இதன்மூலம்,  கிளாம்பாக்கம் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிகள் எளிதாக நடந்து செல்வதற்காக இந்த உயர்மட்ட நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முழுவதும் இரும்பு பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டு வரும் இந்த நடை மேம்பாலம் அமைக்கும் பணி இரவு நேரம் மற்றும் ஞாயிறு போன்ற விறுமுறை நாட்களில் அதிவேகத்துடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது  ஒருபுறம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது  எதிர் திசையில் மலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இடையிடையே மழை பெய்து வருவதால் பணிகளில்  தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் மழை நின்ற பிறகு செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மார்க்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.