டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் 2024 நவம்பர் 25 அன்று தொடங்கி டிசம்பர் 20  வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடையில், நாட்டின் “அரசியலமைப்பு தினத்தை” யொட்டி, 2024 நவம்பர் 26 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து,   நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜு ஆலோசனை  நடத்தினார். இந்த  அனைத்துக் கட்சிக் கூட்டம் 2024 நவம்பர் 24 அன்று காலை 11 மணிக்கு  நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் . பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, நவம்பர் 25ந்தேதி அன்று  குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், இந்த தொடர் தொடங்கியது  முதல் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம், சம்பல் விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின. இதனால்,  மத்தியஅரசு தாக்கல் செய்ய உத்தேசித்திருந்த பல மசோதாக்காள், அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இருந்தாலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாதாக்கல் செய்யப்பட்டு  விவாதம் நடைபெற்றது.  விவாதத்தை தொடர்ந்து, அந்த மசோதா,  நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், “அரசியலமைப்பு தினத்தை” யொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17)  பிற்பகலில் மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா,  எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கின்றன என விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் நேற்று (டிசம்பர் 19) அன்று ரத்தக்களறியானது. இதுதொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளதுடன், இதுகுறித்து டெல்லி காவல்துறையிலும் இருதரப்பும் புகார்களைஅளித்துள்ளன.

இந்த நிலையில்,  குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை அவைகள் கூடியவுடன், எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர். இந்த  முழக்கங்களுக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்புமூலம்  நிறைவேற்றப்பட்டு காலை 11.10 மணிக்கே மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, மாநிலங்களவையில் கூட்டுக்குழுவுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுப்பினர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.