சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மக்களுக்கு சற்று  ஆறுதலை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. கடந்த 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல், அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரியைத்தாண்டி 110 டிகிரி வரை சென்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை ஓரளவுக்கு வெப்பத்தை தணித்து வரும் நிலையில்,  நேற்று சென்னைத் தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஓசூர், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில், வெப்பச்சலனம காரணமாக தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 9 செ.மீ. மழையும், மணப்பூண்டியில் 7 செ. மீ. மழையும் காஞ்சிபுரத்தில் 5  செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும். அதே நேரத்தில் இதன் காரணமாக அனல் காற்று வீச வாய்ப்பு இல்லையென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது.