சென்னை:

மிழக மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவு மீட்கப்பட்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று, மீனவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழகஅரசு கூறி உள்ளது.

தமிழக மீனவர்கள் வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. எல்லை பிரச்சினைகளை காரணம் காட்டி இந்த தாக்குதல்களை இலங்கை ராணுவம் கட்டவிழ்த்து விடுகிறது.

இது தொடர்பாக, மீனவர் நல சங்கம் சார்பில்  இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின்போது,  தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் நேரில் ஆஜராகி, அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், கடந்த மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி, தமிழக மீனவர்கள் 3 பேர் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளதாகவும், இலங்கையில் 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளன.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு 250 ரூபாய் வழங்கப்படுவதாகவும், 1,750 மீனவ குடும்பங்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் விடுவித்துள்ளது என தெரிவித்துள்ள மீன்வளத்துறை இயக்குநர், இத்திட்டத்தின் கீழ் 750 படகுகள் கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

அரசின் அறிக்கையை  பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த திட்டங்களை அமல்படுத்தியதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டும், வழக்கு தொடர்பாக மனுதாரர் பதில் அளிக்க உத்தரவிட்டும்  வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.