இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், ஸ்டொர்பிரிட்ஜ் நகரில் உள்ள அல்டி சூப்பர் மார்க்கெட்டில் ப்ரொக்கோலி வாங்கிய முதியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அவர் வாங்கிய ப்ரொக்கோலி பாக்கெட்டில் பாம்பு இருந்ததை கவனிக்காமல் வாங்கிச் சென்று அதை தனது வீட்டு ப்ரிட்ஜில் வைத்துள்ளார்.

மறுநாள் சமைப்பதற்காக அதை எடுத்தபோது உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டு அலறினார்.

தகவலறிந்து வந்த மீட்புக்குழு அது விஷமில்லாத லேடர் வகை பாம்பு என்பதை கண்டுபிடித்தனர் பின்னர் அந்த பாம்பை அருகில் உள்ள உயிரியல் பூங்காவில் விட்டனர்.

லேடர் வகை பாம்புகள் பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் காணக்கூடிய விஷமில்லாத பாம்பு என்றபோதும் அதன் கடி மிகவும் வேதனைதரக்கூடியது என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது வீட்டில் மாற்றுத்திறனாளி மகனும் வயது முதிர்ந்த மாமியாரும் இருப்பதால் பாம்பு இருப்பதை பார்க்காமல் தவறுதலாக அந்த பாக்கெட்டை திறந்திருந்தால் அதனால் வீட்டிற்குள் என்னென்ன அசம்பாவிதங்கள் நடந்திருக்கோமோ என்று மனவேதனை அடைந்தார்.

இதனையடுத்து அல்டி சூப்பர் மார்கெட்டை தொடர்பு கொண்ட அவருக்கு அதற்கு பதிலாக வேறு ப்ரொக்கோலி பாக்கெட் தருவதாக சமாதானம் கூறியுள்ளனர்.

இதை ஏற்க மறுத்த நெவில்லே லின்டன் என்ற அந்த 63 வயது முதியவர், உயிர் போய் உயிர் வந்தது போல் உள்ள எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்.

மறுபுறம் அல்டி நிறுவனமோ, எங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் விவசாயிகள் பொதுவாக அனைத்து சோதனைகளையும் செய்தே அனுப்புகின்றனர் இந்த தவறு எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை கொஞ்சம் பெரிய மனது பண்ணுங்கள், என்ற ரேஞ்சுக்கு அவரிடம் பேச்சு நடத்தி வருகிறது.