கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அங்கு இட்லி – சாம்பார் விற்கப்படுவது தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவாவின் கலங்குட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கேல் லோபா செய்தியாளர் சந்திப்பில் இதைக் கூறினார்.

“கோவா கடற்கரை பகுதியில் சொந்தமாக இடம் வைத்திருக்கும் அம்மாநிலத்தவர்கள் தங்கள் நிலத்தை வெளிமாநிலத்தவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விடுகின்றனர்.

அந்த இடங்களில் வியாபாரம் செய்யும் வெளிமாநிலத்தவர்கள் குறிப்பாக பெங்களூரைச் சேர்ந்தவர்கள் வட பாவ் மற்றும் இட்லி – சாம்பார் ஆகியவற்றை விற்பனை செய்கிறார்கள்.

இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக” அவர் கூறினார்.

அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதோடு சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த விவாதம் எழுந்துள்ளது.

2025 ஜனவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சுற்றுலா தொடர்பான கருத்தரங்கில், கடந்த 2024ம் ஆண்டு கோவாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில், கோவா மொத்தம் 86,28,162 சுற்றுலா பயணிகளைக் கண்டது, இதில் 81,75,460 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் 4,52,702 சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்தது.

அதேசமயம், 2024 ஆம் ஆண்டில், தற்காலிக புள்ளிவிவரங்கள் கோவா 99,41,285 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் சுமார் 4,67,911 சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்றதாகக் காட்டுகின்றன, இதன் மூலம் மொத்தம் 1,04,09,196 பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

2023 டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 2024 டிசம்பர் மாதம் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 3 சதவீத வளர்ச்சியை கொண்டிருப்பது கிழக்கு ஆசிய மற்றும் இதர இந்திய சுற்றுலாத் தலங்களை விட வெளிநாட்டினர் மத்தியில் கோவா-வுக்கு அதிக மவுசு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், கோவா மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழில்துறை வளர்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து அதன் உள்கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அது சுற்றுலா வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.