நெல்லை: 17ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோயிலில் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் – காந்திமதியம்மன் கோயிலில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 திசைகளிலும் வாசல்கள் உள்ளன. இந்த கோவிலில் 3 பிரதான வாசல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  மூடப்பட்டன. கிழக்கு பகுதியில் உள்ள பிரதான வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘தற்போது திமுக அரசு பதவி ஏற்றதும், மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முக்கிய கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கடந்த வாரம் நெல்லையப்பன் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலருமான மு.அப்துல்வஹாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பழமைவாய்ந்த கோயில்களில்  ஆய்வு செய்யப்படுகிறது. அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் கிழக்கு வாயில் மட்டுமே எப்போதும் திறந்திருப்பதாகவும், மற்ற மூன்று வாயில்களும் திறக்கப்படாததால் சிரமம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். அதனால் உடனடியாக அனைத்து வாயில்களைத் திறக்கவும், கூடுதல் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  நெல்லையப்பன் கோயிலின் மூலவருக்கு தைலக்காப்பு சில ஆண்டுகளாக செய்யப்படவில்லை. அதனை மீண்டும் செய்வதோடு, கோயிலில் உள்ள சிலைகளை பராமரித்து புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளித்தேரை சீரமைத்து தேரோட்டம் நடத்தப்படும். காந்திமதி யானைக்கு மாதம் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது மாதம் இருமுறை பரிசோதனை செய்து சத்துமிகுந்த உணவுப்பொருள்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், காந்திமதியம்மன் சன்னதியில் உள்ள பிரகார மண்டபத்தில் புனரமைப்பு பணிகளைச் செய்ய தொல்லியல் துறையின் பரிந்துரை விரைவில் பெறப்பட்டு உபயதாரர்கள் உதவியுடன் பணி முடிக்கப்படும். தெப்பக்குளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமயஅறநிலையத்துறை கோயில்களில் திருப்பணிகள் செய்யவும், குடமுழுக்கு நடத்தவும் பணிகளை விரைவுப்படுத்த முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும்கூறினார்.

இந்த நிலையில்,  பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலின் வடக்கு,மேற்கு, தென்புற நுழை வாயில்கள் நேற்று  திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த 17 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 3 வாயில்களும் திறக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திறக்கப்பட்ட 3 வாசல்கள் வழியாக ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். 4 வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.