புதுடெல்லி: 

இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டிய பொது நிறுவனமான ஓஎன்ஜிசி (எண்ணை மற்றும் இயற்கை வாயு கழகம்) மோடியின் கடந்த 4 ஆண்டுகளில் கடனாளியாகிவிட்டது.


மத்திய அரசின் பொது நிறுவனமான ஓஎன்ஜிசி 1950-1960-ம் ஆண்டுகளில் வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் எண்ணை பாதுகாப்புக்கு ஒஎன்ஜிசி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

1990-க்குப் பிறகு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியிலும், தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தந்து, ஓஎன்ஜிசி நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளினர்.

ஓஎன்ஜிசி நிறுவனம்  கண்டுபிடித்த முக்கிய 28 எண்ணை வயல்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர்.

கடந்த 1991-ம் ஆண்டு எண்ணை வயல்களை கண்டுபிடிப்பதற்காக ஓஎன்ஜிசி மற்றும் மற்றொரு அரசு நிறுவனமான ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களை உலக வங்கியில் 450 மில்லியன் டாலர் கடன் வாங்குமாறு இந்திய அரசு நிர்பந்தித்தது.

அந்நிய முதலீட்டு உதவியுடன் தனியார் நிறுவனங்களையும் சேர்த்துக் கொண்டு எண்ணை வயல்களை கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்தது.

அப்போது, இந்தியாவின் பணக்கார நிறுவனமாக உச்சத்தில் இருந்தது ஓஎன்ஜிசி.  இந்திய உள்நாட்டு உற்பத்தியில் ஓஎன்ஜிசியின் பங்கு 70 சதவீதமாக இருந்தது.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில், லாபகரமாக இயங்கிய நிறுவனங்களிடமிருந்து பணத்தை உறிஞ்சி எடுத்துக் கொண்டதால், இன்று மலை அளவுக்கு கடன் உயர்ந்திருக்கிறது.

கடந்த நவம்பரில் ஓஎன்ஜிசியின் 60% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க மோடி அரசு முடிவு செய்தது. இதற்கு மற்றொரு அரசு எண்ணை நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது.

ஓஎன்ஜிசியின் நிதி நிலைமை வருடாந்திர வரவு-செலவு அறிக்கையில் வெளிப்படும். கடந்த 4 வருடாந்திர அறிக்கைகள் மூலம் நிலைமை மிகவும் மோசமாக இருப்பது தெரிகிறது.

இது வருத்தமான விசயம் மட்டுமல்ல. எதிர்கால இந்திய எரிசக்தி தேவையையே கேள்விக்குறியாக்கி உள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து கையிருப்பு நிதியைக் கணக்கிடும்போது, 2017-18 நிதியாண்டில் 90%-க்கு அதிகமாக குறைந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டிய ஓன்ஜிசி நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டது.

அப்போது ஓஎன்ஜிசியின் நிகர லாபம் ரூ.18,334 கோடியாக இருந்தது. அதன்பின்னர், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
விநியோகஸ்தர்களுக்கான எரிபொருள் மானியத்தை தர மத்திய அரசு மறுத்துவிட்டது.

ஓஎன்ஜிசி தன் கையில் இருந்து மானியம் கொடுத்ததால், நிறுவனத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகிவிட்டது.

கடந்த 2018-ல் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51.11% பங்குகளை வாங்குமாறு ஓஎன்ஜியை மத்திய அரசு நிர்பந்தித்தது.

மோடி அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் தான் ஓஎன்ஜிசி ரூ.35 ஆயிரம் கோடி கடன் வாங்கும் அளவுக்கு தள்ளப்பட்டது. 2017-18-ம் ஆண்டின் இறுதியில் ஓஎன்ஜிசியின் கடன் தொகை 25,592.2 கோடியாக உயர்ந்தது.

நாட்டிலேயே அதிக வருவாயை ஈட்டித் தந்த ஓஎன்ஜிசி நிறுவனம் இன்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.