டெல்லி: மத்தியஅரசு ஆண்டுதோறும்  வீரதீர செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு  விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு  வீரதீர செயல் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்க 15ந்தேதி கடைசி நாள் என்று அறிவித்து உள்ளது.

மத்தியஅரசின் சார்பில்,  பால கல்யாண் புரஷ்கார், பாலசக்தி புரஷ்கார், பிரதமரின் தேசீய குழந்தைகள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வீரதீர செயல் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு; குழந்தைகளுக்கு சிறந்த சேவை நபர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விருது பெற தகுதியானர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 15ந்தேதியுடன் நிறைவடைகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது,

இந்திய  அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம், ‘‘பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது’’ அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இம்மாதம் 15ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலைமற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறை களில் வீரதீர செயல் புரிந்த தனி தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக ‘‘பாலசக்தி புரஷ்கார்’’ என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக‘‘பாலகல்யாண் புரஷ்கார்’’ என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.nca-wcd.nic.in என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் இம்மாதம் 15ந் தேதி ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தைஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசுத் தலைவரால் தேசிய விருது வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.