சென்னை: திரையரங்குகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுகட்டும் வகையில், கர்நாடக மாநில அரசு, திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டிலும் இதுபோல திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் கட்டண கொள்ளைக்கு அரசு முடிவு கட்டுமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மல்டிபிளக்ஸ்கள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் கேளிக்கை வரி உட்பட திரைப்பட டிக்கெட் விலையை ரூ.200 ஆக நிர்ணயிக்கும் சட்டத் திருத்தத்தை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. இது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

 கர்நாடக  மாநில காங்கிரஸ் அரசு, மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்; “அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட ரூ.200க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும். இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதை நிறைவேற்றும்வ கையில்,  தற்போது அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி மாநிலத்தில் உள்ள திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என அனைத்து வகை தியேட்டர்களின்  திரைப்பட டிக்கெட் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த உத்தரவு, பொழுதுபோக்கு வரி உட்பட அனைத்து மொழி படங்களுக்கும், அனைத்து வகை திரையரங்குகளுக்கும் பொருந்தும். என குறிப்பிட்டுள்ளது.

இது கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) (திருத்த) விதிகள், 2025 இன் கீழ், கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1964 இன் பிரிவு 19-ஐ பயன்படுத்தி உள்துறைத் துறையால் வெளியிடப்பட்டது. மக்களுக்கு சினிமாவை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதுடன், கன்னட சினிமாவை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.