சென்னை,
திருப்பதி ஏழுமலையானுக்கு எதற்கு பாதுகாப்பு என்று கனிமொழி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ன்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல் எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி, “திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல்” எனக்கூறியுள்ளார். இது 150 கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. ஒரு பொறுப்புள்ள ராஜ்யசபா உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளது. நமது அண்டை மாநிலங்களில் வாழும், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா வாழ் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்திட வாய்ப்புள்ளது.
எனவே உலகமெங்கும் வாழும் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள தி.மு.க. ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது