சென்னை:
சென்னை-சேலம் இடையே 10ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, சென்னை-சேலம் இடையே, ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழிகளுடன் பசுமை சாலை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று மாலை தூத்துக்குடியில் சரக்குவாகனங்கள் நிறுத்தும் முனையம் மற்றும் தகவல் நிலையம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இன்று மாலை 3 மணி அளவில் விழா நடைபெற உள்ள நிலையில், நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர், அடையாரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின்போது, தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை, நிதின் கட்காரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை-சேலம் இடையே, ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிகளுடன் பசுமை வழிச் சாலை அமைக்கப்படும் என்றும், இதன் காரணமாக பயணம் நேரம் 2 மணி நேரம் குறையும் என்றார்.
மேலும் தமிழகமும், கர்நாடகவும் இந்தியாவின் 2 கண்கள் என்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என நிதின் கட்காரி கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை விரைவாக அமைக்க வேண்டும்.
கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவிரி என அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சேலம் நகரத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, சேலம் மற்றும் சென்னை நகரங்களுக்கு இடையே பசுமை வழித்தடம் அமைக்கவேண்டும்.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே பசுமை வழித்தடத்தையும் சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.