மும்பை:
கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் நோய் பரவல் தீவிரம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளின் விலையை அந்த மருந்தை தயாரித்து வரும் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. கோவாக்சின் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது. கோவிஷீல்டு மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது