ஆளுநர்கள் மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் என்று பா.ஜ.க.வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் டி.டி.வி. தினகரன்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தான் கைது செய்யப்பட்ட போதும் மத்திய பா.ஜ.க. அரசு மீது எந்தவித கண்டனத்தையும் தினகரன் தெரிவிக்கவில்லை. நீட் உட்பட பிரச்சினைகள் வந்தபோதும் மத்திய அரசைக் கண்டித்து பேசவில்லை.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ், “சித்திரகுப்தன்” என்ற பெயரில் கவிதை எழுதினார். உடனே, “எங்களுக்கு எதிராக சதி நடக்கிறது” என்று சொல்லி அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
ஆனால் வருமானவரி சோதனைகளை அடுத்து, பாஜகவை மறைமுகமாக பட்டும்படாமலும் விமர்சித்து வந்தார்.
ஆனால், தற்போது, கோவையில் ஆளுநர் ஆய்வு செய்த விவகாரம் குறித்து காட்டத்துடன் விமர்சித்திருக்கிறார் டிடிவி தினகரன்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தினகரன், “புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை ஆளுனர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பி.ஜே.பி.யின் பாணி இது போலும்!” என்று பதிவிட்டுள்ளார்.