டில்லி,
இந்த ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையை ஆற்றுகிறார்.
இந்த உரையின்போது சலுகைகள் ஏதேனும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
குடியரசு தலைவர் உரையை தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள் அடங்கிய, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதைத்தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்களும் இந்தகூட்டத் தொடரில் விவாதத்துக்கு வருகின்றன. இதன் காரணமாக பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று நடக்கின்றன. அதுபோல எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.