சென்னை: நாடாளுமன்ற தேர்தல்  இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 22ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டியுள்ளது. இதில், தமிழக தேர்தல் ஆணையர் சாகு பங்கேற்க டெல்லி சென்றுள்ளார்.

இதற்கிடையில்,  வழக்கதமாக ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்  நடைபெற்றன.  இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் , நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த 2023ம் ஆண்டு  அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கியது. வரைவு வாக்காளர் பட்டியலும் அன்றே வெளியிடப்பட்டது. அன்று முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்யவும் முகவரி மாற்றம் மற்றும் திருத்தவும் மனுக்கள் பெறப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளால் விண்ணப்ப பரிசீலனை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.