தேனி: தேனி அருகே, உயிருடன் உள்ள மகள், இறந்துவிட்டதுபோல, தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பம்வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகள், பெற்றோரின் பேச்சை மீறி, காதல் திருமணம் முடித்ததால், விரக்தி அடைந்த தந்தை, அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது.
தேனி அருகே உள்ளது சின்னமனூர். அதன் அருகே உள்ள வேப்பம்பட்டையை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜெயபால் – செல்வி தம்பதியர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவர்கள் பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
சமபத்தில், சொந்த ஊரான வேப்பம்பட்டி கிராமத்திற்கு குடும்பத்துடன் திரும்பிய நிலையில், மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி உள்ளனர். அதன்படி, மணமகன் ஒருவரையும் தேர்வு செய்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு, உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 2ந்தேதி) அன்று திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (ஆகஸ்டு 29ந்தேதி) அன்று, அவரது மகள் கீர்த்தனா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்திலும் விசாரித்துள்ளனர்.
அப்போது கீர்த்தனா, வேறு ஒரு பையனுடன், வீட்டை விட்டு சென்றுவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கீர்த்தனாவையும், அவரை கூட்டிச் சென்றவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இருவரும் மேஜர் என்றும், ஏற்கனவே காதலித்து வந்ததாகவும், தற்போது, திருமணம் செய்து கொண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தான் கணவருடனே செல்ல விரும்புவதாகவும் கீர்த்தனா கூறியுள்ளார்.
ஆசையாக வளர்த்த மகள், பெற்றோரின் ஆசையை நிறைவேற்றாமல், காதல் கணவருடன் சென்றதால், விரக்தி மற்றும் ஆத்திரமடைந்த தந்தை ஜெயபால் தனது மகள் இறந்து விட்டதாக கூறி, ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.
மகள் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு சொந்த தந்தையே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.