சேலம்:
சேலத்தை மிரட்டி வந்த பிரபல ரவுடியான கதிர்வேலை காவல்துறையினர் இன்று என்கவுண்டரில் போட்டுத்தள்ளினர்.
சேலத்தை அடுத்த வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் காரிப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ரவுடி கதிர்வேலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரவுடி கதிர்வேலை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது கதிர்வேல் மற்றும் அவரது நண்பர்கள் சேலம் அருகே உள்ள காரிப்பாட்டியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டை காரிப்பட்டி ஆய்வாளர் சுப்ரமணி, உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, ரவுடி கதிர்வேல் மற்றும் அவரது கூட்டாளிகள் கொடுவாள் மற்றும் வீச்சரிவாளால் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஆய்வாளர் சுப்ரமணி, உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் சுப்ரமணி கதிர்வேல்மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார். இதில் கதிர்வேல் பலியானார். மேலும் தப்பிய ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், கதிர்வேலை உயிருடன் பிடிக்க முயன்றோம். ஆனால் அவர் தாக்குதல் நடத்த முற்பட்டதால் என்கவுண்ட்டர் செய்ய வேண்டியதாயிற்று என்றும், சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட வுடிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.