போலி என்கவுண்டர் அநீதியானது, எதிர்காலம் கேள்விக்குறினாவர்கள் என்கவுண்டரை தங்கள் பலமாக கருதுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கொள்ளை வழக்கு ஒன்றில் அனுஜ் பிரதாப் சிங் என்ற நபர் இன்று காலை உபி எஸ்.டி.எஃப். காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சுல்தான்பூர் நகரில் உள்ள தத்தேரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி ரூ. 1.5 கோடி பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் நடந்த மறுநாள் இதன் மூளையாக செயல்பட்ட விபின் சிங் காவல்துறையிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் விவேக் சிங், துர்கேஷ் சிங், அரவிந்த் யாதவ் மற்றும் வினய் சுக்லா ஆகிய 4 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில் 2.25 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி மற்றும் பணம் ஆகியவை அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை சிறப்பு காவல் படையினர் தேடி வந்த நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் மங்கேஷ் யாதவ் என்பவர் செப்டம்பர் 5ம் தேதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அமேதி மாவட்டத்தில் உள்ள ஜனபூர் கிராமத்தைச் சேர்ந்த அனுஜ் பிரதாப் சிங் என்ற மற்றொரு குற்றவாளியை உ.பி. எஸ்டிஎஃப் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்றது.
இந்த என்கவுண்டர்கள் போலியானது என்றும் லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பழிவாங்கவும் மாநிலத்தின் எதிர்காலத்தை சீரழிக்கவும் பாஜக மேற்கொள்ளும் சதி இது என்று உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் இதற்கு முன் மங்கேஷ் யாதவ் கொல்லப்பட்டபோது சாதி ரீதியான மோதலை உருவாக்க பாஜக தலைமையிலான அரசு இந்த போலி என்கவுண்டரை நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
“பலவீனமான மக்கள் என்கவுன்டர்களை தங்கள் பலமாக கருதுகிறார்கள். போலியாக ஒருவரை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்வது அநீதியாகும். வன்முறை மற்றும் இரத்தத்தால் உத்தரபிரதேசத்தின் இமேஜைக் கெடுப்பது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு பெரிய சதி.” வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடையப்போவதை எதிர்பார்த்து, ஆளும் பாஜக உத்தரபிரதேசத்தில் வேண்டுமென்றே கலவரத்தை உருவாக்கி வருவதாகவும்” முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டினார்.