உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் போலி தூதரகம் ஒன்று செயல்பட்டு வந்ததை அம்மாநில சிறப்பு பணிக்குழு (STF) நேற்று முன்தினம் (ஜூலை 22) கண்டுபிடித்தது.

இந்த மோசடி தொடர்பாக ஹர்ஷவர்தன் ஜெயின் என்ற ஒருவரை மட்டும் காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உள்துறை அமைச்சகத்தின் ரப்பர் ஸ்டாம்புகள் மற்றும் பெருமதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் கைப்பற்றப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்ததாகவும், ஹவாலா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

தவிர, இந்த விவகாரத்தில் இவர் ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த போலி தூதரகத்தில் இருந்து வெளிநாட்டு கொடி மற்றும் தூதரக பெயர்பலகையுடன் கூடிய நான்கு சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

உ.பி.யின் முக்கிய நகரங்களில் ஒன்றான காஜியாபாத்தின் கவி நகரில் 2017 முதல் செயல்பட்டு வரும் இந்த போலி தூதரகம் வெஸ்டார்டிகா, செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா போன்ற கற்பனையான நாடுகளின் தூதரகமாக இருந்துவந்தது.

இதையடுத்து முக்கிய நகரில் வெளிநாட்டு தூதரகம் என்ற பெயரில் வெளிப்படையாக இதுபோன்ற துணிச்சலான மோசடியில் ஈடுபட்டது உளவுத் துறையின் செயலற்ற தன்மையை காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும், உள்துறை அமைச்சகத்தின் முத்திரை மற்றும் போலி பாஸ்போர்ட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இதில் உள்துறை அமைச்சகமும் அலட்சியமாக இருந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடி ஏழு ஆண்டுகளாக கண்டறியப்படாமல் செயல்பட்டது, வெளிநாட்டு தூதரகங்களை மேற்பார்வையிடுவதற்கும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பணிக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் மீதான ஒரு கண்டனக் குற்றச்சாட்டாகும்.

பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை வழிமுறைகள் படுமோசமாக தோல்வியடைந்து, ஹவாலா நெட்வொர்க்குகள் செழித்து வளர அனுமதித்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நம்பிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்ஷவர்தன் ஜெயின் மீது தடை செய்யப்பட்ட சாட்டிலைட் தொலைபேசி பயன்படுத்தியதாக 2011ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் 2018ம் ஆண்டு முதல் வாடகைக்கு வீடு எடுத்து போலி தூதகரம் நடத்தி வந்தது உள்துறை அமைச்சகத்திற்கோ உளவுத்துறைக்கோ தெரியாமல் போனது எப்படி என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பெரிய நகரத்தில் தூதரகம் என்ற பெயரில் இயங்கி வந்த இடத்தை கண்காணிக்கக் கூட ஆள் இல்லாமல் இருந்தது எப்படி சாத்தியமானது எனபது குறித்தும் உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.